by Staff Writer 22-06-2021 | 9:37 PM
Colombo (News 1st) மன்னார் - மாந்தை மேற்கு கிராம உத்தியோகத்தரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்றத்தில் சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
COVID-19 தொற்று நிலையாலும் 6 மாதங்களுக்கு மேலாக சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாலும் அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதற்கமைய, 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல மன்னார் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாதாந்தம் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என சந்தேகநபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலுப்பைக்கடவை பகுதிக்கான கிராம உத்தியோகத்தராக கடமையாற்றிய எஸ்.விஜயேந்திரன் கடந்த வருடம் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி தாக்கிக் கொலை செய்யப்பட்டிருந்தார்.