by Staff Writer 21-06-2021 | 10:33 PM
Colombo (News 1st) இலங்கையின் திட்டங்களில் சீனா பங்கேற்றிருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என இந்திய கடற்படையின் துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியா தமது சமுத்திர பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்காக, அமெரிக்காவிடமிருந்து நவீன தொழில்நுட்பத்துடனான போர்த் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட 30 ஆளில்லா விமானங்களை, மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கொள்வனவு செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் இந்தியா தயாரானது.
இந்த 30 ஆளில்லா விமானங்களை நவீன ரக கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது.
MQ-9B கடல் பாதுகாப்பு ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியா தயாராகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் வல்லமை மற்றும் கடல் கண்காணிப்பிற்கான நவீன தொழில்நுட்ப வசதி இந்த ஆளில்லா விமானங்களில் உள்ளன.
இவற்றின் உச்ச பயண நிறை 5.6 தொன்னுக்கும் அதிகம் என்பதுடன், 40 மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பயணிக்கும் ஆற்றல் கொண்டவையாகும்.
இலங்கையில் சீனா முன்னெடுக்கும் துறைமுக வலயத் திட்டம், இந்தியாவின் அபிலாஷைகளுக்கு அச்சுறுதலாக அமைவதற்கு வாய்ப்புள்ளதாக வைஸ் அட்மிரல் ஜீ.அசோக் குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தெய்வேந்திர முனை மீன்பிடித் துறைமுகம் மற்றும் திக்வெல்ல - நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்திற்கு இடையிலான கடற்பகுதியிலிருந்து உரிமையாளர் அற்ற படகொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 20 தொடக்கம் 25 கடல் மைல் தொலைவில், இந்தப் படகு கண்டுபிடிக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
நில்வெல்ல மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் முதலில் இந்தப் படகை அவதானித்துள்ளதுடன், அவர்கள் மிரிஸ்ஸ கரையோர பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் அதிகாரிகள் படகை துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
படகு கைப்பற்றப்பட்டபோது, அதில் இயந்திரம் இருக்கவில்லை.
இதனிடையே, கடந்த 17 ஆம் திகதி புத்தளம் - உடப்பு சின்னப்பாடு கரையோரத்தில் இருந்து உரிமையாளர் இல்லாத இரண்டு படகுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சுமார் 30 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட இந்த படகுகள் இலங்கையில் பயன்படுத்தப்படுவதில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்திய கடற்படையின் கண்காணிப்பு விமானம் மற்றும் உரிமையாளர்கள் இல்லாத படகுகள் பற்றிய தகவல்களுக்கு மத்தியில் இலங்கையில் குளங்களை புனரமைக்கும் திட்டத்தை சீன கூட்டு நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
அதன் கீழ் திஸ்ஸமஹாராம குளத்தை புனரமைக்கும் செயற்பாடுகள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஸ தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.