சிறுவர்கள் மத்தியில் பரவும் COVID தொற்று: அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் பரவும் COVID தொற்று: அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

சிறுவர்கள் மத்தியில் பரவும் COVID தொற்று: அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

21 Jun, 2021 | 10:14 pm

Colombo (News 1st) COVID -19 தொற்றுடன் தொடர்புடைய புதிய நோய் ஒன்று (Multisystem Inflammatory Syndrome – MIS-C) இலங்கையின் சிறார்களிடையே பரவி வருவதாக சிறுவர் நோய் வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதற்கு முன்னதாக இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த நோய் அடையாளம் காணப்பட்டிருந்தது.

கடந்த 19 ஆம் திகதியளவில், இந்த நோய் தொற்றுக்குள்ளான 6 சிறுவர்கள் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது அவர்களில் சிலர் குணமடைந்துள்ளனர்.

இதுபற்றி குறித்த வைத்தியசாலையின் சிறுவர் நோய் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா
தெரிவித்ததாவது,

கடந்த மூன்று வாரங்களிலேயே இந்த நோயை நாம் அவதானித்தோம். 5 வயது தொடக்கம் 15 வயது வரையான சிறுவர்களுக்கு COVID தொற்று ஏற்பட்டு சிலவேளை நோய் அறிகுறிகள் தென்படாதிருக்கலாம். சிலருக்கு நோய் அறிகுறிகள் தென்பட்டிருக்கலாம். இரண்டு வாரங்களுக்கு பின்னர் COVID நோய் எதிர்ப்பு உருவாகின்றது. இந்த அன்டிஜன் ஏற்பட்டு இரண்டு வாரங்களில் பல உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல், மூளை ஆகிய உறுப்புக்களுக்கும் சருமத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது

நான்கு நாட்கள் வரை காய்ச்சல் நீடித்தல்,  கண்கள் சிவத்தல்,  கழுத்தை சுற்றி கட்டிகள் ஏற்பட்டு வீக்கம் ஏற்படல்,  உதடுகள், நாக்கு சிவத்தல்,  சருமத்தில் சிவப்பு புள்ளிகள் ஏற்படல், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சுவாசக் கோளாறு இருமல் ஏற்படல், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வயிற்று வீங்குதல், கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீரகங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சிறுநீர் கடும் நிறத்தில் வௌியேறல், சிறுநீர் கடுப்பு ஏற்படல்,  சிறுநீரின் அளவு குறைவடைதல்,  இருதயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் குருதி அழுத்தம் குறைவடைதல்,  இதனால் தலைவலி ஏற்படல்,  செயற்றிறன் இல்லாமல் சோர்வடைந்து காணப்படுதல் என்ப இந்நோயின் அறிகுறிகள் என தீபால் பெரேரா குறிப்பிட்டார்.

இத்தகைய அறிகுறிகள் இருந்தால், தகுதியான வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலைக்கோ பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு அவர் வலியுறுத்தினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்