பயணக் கட்டுப்பாடு  நாளை (21) தளர்வு

பயணக் கட்டுப்பாடு  நாளை தளர்வு; சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு  அறிவுறுத்தல்

by Staff Writer 20-06-2021 | 10:08 PM
Colombo (News 1st) பயணக் கட்டுப்பாடு நாளை (21) அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படுவதுடன், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பின்பற்றி செயற்படுமாறு அரசாங்கம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. வர்த்தக நிலையங்களினுள் நுழைவதற்கும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் வரையறைகள் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். மேல் மாகாணத்தில் மாத்திரம், உட்பிரவேசிக்கும் இடங்களிலுள்ள வீதித்தடைகளுக்கு மேலதிகமாக மேலும் சிறு வீதித் தடைகள், திடீர் வீதித் தடைகளை 500 இடங்களில் நாளை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.   இதேவேளை, குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பஸ்களையும் ரயில்களையும் போக்குவரத்தில் ஈடுபடுத்த எண்ணியுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். எனினும், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படவில்லை. மாகாணத்திற்குள்ளேயே போக்குவரத்து முன்னெடுக்கப்படும். குறிப்பிடத்தக்களவு தனியார் பஸ்களையும், அரச பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார். மேல் மாகாணத்திற்குள் 17 ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் பிரதான மார்க்கத்தில் ஏழும், கரையோர மார்க்கத்தில் நான்கும், அளுத்மகவிலிருந்து மருதானை வரை களனிவௌி மார்க்கத்தில் அவிசாவளையிலிருந்து இரண்டும், பாதுக்க ரயில் நிலையத்திலிருந்து இரண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அதிகார சபை தெரிவித்தது.   இதனைத்தவிர, சிலாபம் மார்க்கத்தில் மூன்று ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன்,  17 ரயில் சேவைகள் நாளை காலை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டது. வடமேல் மாகாணம் - போலவத்தவிலிருந்து புத்தளம் வரையிலும், கொல்கஹவெலவிலிருந்து மாஹோ வரையிலும், தென் மாகாணத்தின் பெலிஅத்தவிலிருந்து இந்துருவ வரையிலும் தலா ஒரு அலுவலக ரயில் வீதம் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அந்த ரயில்கள் மீண்டும் பயணத்தை ஆரம்பித்த இடங்களுக்கு செல்லவுள்ளன. இந்நிலையில்,  இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. டெல்டா வைரஸ் திரிபு சமூகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சில நாட்களுக்கு பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது, வைரஸ் அதிகளவில் பரவுவதற்கும் புதிய வைரஸ் திரிபு பரவுவதற்கும் சந்தர்ப்பமாக அமையும் என  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.