பொதுமக்களுக்கான வழிகாட்டல் கோவை வெளியீடு

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல் கோவை

by Staff Writer 20-06-2021 | 10:19 PM
Colombo (News 1st) நாளை (21) முதல் எதிர்வரும் 05 ஆம் திகதி வரை பொதுமக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, வீடுகளிலிருந்து இருவர் மாத்திரமே வௌியில் செல்ல முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தில் ஆசன எண்ணிக்கையின் 50 வீதமான பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியுமென்பதுடன், இந்த அறிவிப்பு அத்தியாவசிய சேவைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் போக்குவரத்து சேவைகளுக்கு மாத்திரமே நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார், வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும். இதேவேளை, திருமண நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்பதுடன், மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத்திருமணம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. COVID காரணமாக  நிகழாத ஏனைய மரணங்களின் இறுதிக்கிரியைகள், சடலம் ஒப்படைக்கப்பட்டதிலிருந்து 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் 15 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும். இதேவேளை, இரவு நேர களியாட்ட விடுதிகள், ஹோட்டல்கள், வாடி வீடுகள் என்பன தொடர்ந்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் - அவசர மற்றும் அத்தியாவசிய விடயங்களுக்காக மாத்திரமே திறக்கப்பட வேண்டுமெனவும் முதியோர் மற்றும் சிறுவர் இல்லங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் வௌிநபர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சினால் நடத்தப்படும் பரீட்சைகள் தவிர்ந்த ஏனைய பரீட்சைகளை நடத்த அனுமதியில்லை.