தொடர்ந்தும் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்; காரணத்தை வெளியிடாத அதிகாரிகள் 

தொடர்ந்தும் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்; காரணத்தை வெளியிடாத அதிகாரிகள் 

தொடர்ந்தும் கரையொதுங்கும் கடல்வாழ் உயிரினங்கள்; காரணத்தை வெளியிடாத அதிகாரிகள் 

எழுத்தாளர் Bella Dalima

20 Jun, 2021 | 11:24 pm

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் X-Press Pearl  கப்பல் பிரவேசித்து இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகின்றது.

இந்த கப்பல் மூழ்கி பல நாட்கள் கடந்தாலும் இதிலிருந்த இரசாயனப் பொருட்கள் தொடர்பில் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கின

புத்தளம் – உடப்பு முகத்துவாரம் பகுதியில் இறந்த நிலையில் கடலாமையொன்று இன்று அதிகாலை கரையொதுங்கியுள்ளது. நான்கு அடி நீளமான கடலாமை, சுமார் 25 கிலோ கிராம் எடையுடையது என செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தல் – சின்னப்பாடு பகுதியில் கடலாமை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. 30 கிலோ எடை கொண்ட இந்த கடலாமையின் தலை சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

புத்தளம் மாவட்ட கடற்கரையோரங்களில் மாத்திரம் இதுவரை உயிரிழந்த 24 கடலாமைகளும் 4 டொல்பின்களும் கரையொதுங்கியுள்ளன.

இதனிடையே, அம்பாறை – திருக்கோவில் விநாயகபுரம் – முகத்துவாரம் கடற்கரையில் இறந்த இரண்டு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன.

அத்துடன், திருக்கோவில் – தம்பட்டை கடற்கரையில் ஒரு கடலாமை கரையொதுங்கியுள்ளது.

திருக்கோவில் பகுதியில்,நேற்று மாலை இரண்டு கடலாமைகளும் டொல்பினொன்றும் கரையொதுங்கியிருந்தன.

இவையனைத்தும், உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் தீவகத்தின் வேலணை பகுதியில் டொல்பின் கரையொதுங்கியுள்ளது.

கல்முனை கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு கடலாமைகள் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே மட்டக்களப்பு – நாவலடி கடற்கரையில் உயிரிழந்த கடலாமை ஒன்று இன்று மாலை கரையொதுங்கியுள்ளது.

இதேவேளை, அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான Washington Post பத்திரிகை இந்தக் கப்பலிலிருந்த கொள்கலன்கள் தொடர்பில் தகவல்களை வௌியிட்டுள்ளது.

இரசாயனப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் கதிரியக்கப் பொருட்கள் அல்லது அதன் உள்ளடக்கங்கள் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபையின் பணிப்பாளர் நாயகம் அனில் ரஞ்சித்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

கொள்கலன்களில் இயற்கைக் கதிரியக்கப் பொருள் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சிறு அளவிலேனும் செயற்கைக் கதிரியக்கப் பொருட்களை ஏற்றிச்செல்வதாக இருந்தால் கட்டாயம் அனுமதி பெற வேண்டும். எனினும், இயற்கையான யுரேனியம், தோரியம் போன்ற மண்ணை ஏற்றிச்செல்லும் போது அனுமதி பெறத்தேவையில்லை.

என அவர் பதிலளித்தார்.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் சபை அவ்வாறு தெரிவித்தாலும், அண்மையில் அத்தகைய அனுமதி இன்றி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கதிரியக்கப் பொருள் அடங்கிய கப்பலொன்று வந்தது.

கப்பல், துறைமுகத்திற்குள் பிரவேசிக்கும் வரை அதில் கதிரியக்கப் பொருள் இருந்ததை அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை.

இந்நிலையில், X-Press Pearl  கப்பலில் தீ பரவியமையால் சுற்றாடலுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு இலங்கைக்கு வருகை தந்த நிபுணர் குழு இன்று கப்பல் மூழ்கிய இடத்திற்கு சென்று ஆய்வுகளை ஆரம்பித்தது.

இந்தக் குழுவில் பிரான்ஸ் பிரஜைகள் இருவரும் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த இருவரும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் திட்டத்தின் இணைப்பதிகாரி ஒருவரும் அடங்குகின்றனர்.

கப்பலிலிருந்த பொருட்களினால் இலங்கையின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புக் குறித்து எந்தவொரு அதிகாரியும் உறுதியான தகவலை வௌியிடவில்லை.

கடலில் கலந்த இரசாயனப் பொருள் தொடர்பிலும் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.

நாளாந்தம் இறக்கும் கடல் ஆமைகள், டொல்பின்கள், திமிங்கிலங்கள் தொடர்பிலும் தௌிவுபடுத்த அதிகாரிகள் தவறியுள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையிடம் வினவினாலும், நீதிமன்ற நடவடிக்கையின் பின்னரே அந்தத் தகவல்களை வழங்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்