11 கடலாமைகளும் 3 டொல்பின்களும் இன்று கரையொதுங்கின

உயிரிழந்த 11 கடலாமைகளும் 3 டொல்பின்களும் இன்று கரையொதுங்கின

by Staff Writer 19-06-2021 | 11:05 PM
Colombo (News 1st) கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்குவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை என  கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.   அமைச்சர் அவ்வாறு கூறினாலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் கடற்கரைகளில் நேற்றும் இன்றும் கடல் ஆமைகளும் திமிங்கிலங்களும் கரையொதுங்கின. அதனடிப்படையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உயிரிழந்த நிலையில் 11 கடல் ஆமைகளும் மூன்று டொல்பின்களும் இன்று கரையொதுங்கியுள்ளன. மட்டக்களப்பு - கிரான்குளம் கடற்கரையில் 2 கடலாமைகளும் டொல்பின் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. டொல்பினின் உடலில் காயங்கள் காணப்படுகின்றன. கரையொதுங்கிய உயிரினங்களின் உடல்கள், உடற்கூற்று பரிசோதனைக்காக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. கல்முனை - பாண்டிருப்பு கடற்கரையில் இன்று கடல் ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது. இதனிடையே, மட்டக்களப்பு - தாழங்குடா கடற்கரை பகுதியில் 5 1/2 அடி நீளமான டொல்பின் ஒன்று சிதைவடைந்த நிலையில் இன்று கரை ஒதுங்கியுள்ளது. கல்முனை - பெரிய நீலாவனை பிரதேசத்திலும் மூன்று ஆமைகள் உயிரிழந்த நிலையில் இன்று கரையொதுங்கின. மன்னார் - முசலி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரடிக்குளி கடற்கரையில் நேற்று மாலை உயிரிழந்த டொல்பின் ஒன்று கரையொதுங்கியது. புத்தளம் - முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி கிராம சேவகர் பிரிவிலுள்ள பாரிபாடு கடற்கரையோரத்தில் கடலாமையொன்றின் உடல் நேற்றிரவு கரை ஒதுங்கியது. அதன்படி , முந்தல் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் 7 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன. மாரவில - லங்சிகம கடற்கரையில் டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது. X-Press Pearl கப்பல் தீப்பற்றி ஒரு வாரத்தில் உயிரிழந்த கடல் ஆமையொன்று பாணந்துறையில் கரையொதுங்கியது. அதன் பின்னர் ஹிக்கடுவ, ​கொஸ்கொடை, அம்பலாங்கொடை, ரெகவ, நீர்கொழும்பு, மாரவில, கற்பிட்டி, மன்னார் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழந்த நிலையில் கடல் ஆமைகளும் டொல்பின்களும் கரையொதுங்கின. இதுரை 70 -க்கும் அதிகமான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கியுள்ளன. எனினும், கப்பலில் இருந்த இரசாயனங்கள் காரணமாக இவை உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லை என வன ஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சீ.பி.ரத்நாயக்க குறிப்பிட்டார்.