உரத் தட்டுப்பாட்டால் அல்லலுறும் விவசாயிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

உரத் தட்டுப்பாட்டால் அல்லலுறும் விவசாயிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

உரத் தட்டுப்பாட்டால் அல்லலுறும் விவசாயிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

19 Jun, 2021 | 9:44 pm

Colombo (News 1st) இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகள் இன்மையால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள விவசாயிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

உரத்திற்காக இன்று மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை முன்னெடுத்தனர்.

மாத்தளை – எல்கடுவ பகுதியில் உள்ள சிறு தேயிலை தோட்ட சங்க உறுப்பினர்களால் இன்று எல்கடுவ நகரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேயிலைத் தோட்டங்களுக்கு பல மாதங்களாக உரம் இன்மையால் தமது தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

திருகோணமலை – கிண்ணியா, புளியடிக்குடா விவசாயிகளும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இரசாயன பசளை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பசளைகள் கிடைக்கப்பெறாமையால் தமது ஜீவனோபாயமான விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வௌியிட்டனர்.

இதேவேளை, உரத்தட்டுப்பாட்டிற்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பண்டாரவளை – ஹீல் ஓயா பகுதியில் மரக்கறி செய்கையாளர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் சிறுபோக வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உரத் தட்டுப்பாட்டினால் செய்கையாளர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் சுமார் 2000 ஹெக்டேர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு வலிகாமம் கிழக்கு, வலிகாமம் தென்மேற்கு வடமராட்சி பகுதிகளில் அதிகளவான வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

யாழ். இணுவில் மற்றும் வலிகாமம் வடக்கு அம்பனை பகுதியில் வெங்காயச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், உரத் தட்டுப்பாடு நிலவுவதாக செய்கையாளர்கள் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்