தெஹிவளை மிருகக்காட்சி சாலை சிங்கத்திற்கு கொரோனா

தெஹிவளை மிருகக்காட்சி சாலை சிங்கம் ஒன்றுக்கு கொரோனா

by Staff Writer 18-06-2021 | 2:01 PM
Colombo (News 1st) தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கத்தை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிங்கத்திற்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க குறிப்பிட்டார். இந்தியாவின் விசேட நிபுணர்களின் ஆலோசனைக்கு அமைய சிங்கத்திற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்படுவதாக அவர் கூறினார். அங்குள்ள பெண் சிங்கமும் சிறிதளவு நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் தெரிவித்தார். மிருகக்காட்சி சாலையிலுள்ள ஆண் சிங்கத்திற்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். கொழும்பில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார். மிருகக்காட்சி சாலையிலுள்ள ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா, இதனூடாக ஏனைய மிருகங்களுக்கு தொற்று ஏற்படுமா என்பது குறித்தும் ஆராயப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.