பயணக்கட்டுப்பாடு நீடிப்பிற்கு தரவுப் பிழையே காரணம்

தவறான தரவுகள் காரணமாகவே ஜூன் 14 ஆம் திகதி நீக்கப்படவிருந்த பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்பட்டது: ஜனாதிபதி தெரிவிப்பு

by Bella Dalima 18-06-2021 | 9:50 PM
Colombo (News 1st) COVID ஒழிப்பு விசேட குழு ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று (18) முற்பகல் கூடி கலந்துரையாடியது. அதன் பின்னர் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த 14 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகளை நீக்கவிருந்ததாகவும், அதற்கு முன்னதாக 11 ஆம் திகதி 101 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டி ஏற்பட்டதாகவும் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
ஜூன் 11 ஆம் திகதி மரணித்ததாக கூறுவதாக இருந்தால், 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியில் இருந்து 11 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையே அந்தக் காலப்பகுதி அமையும். எனினும், அறிக்கையிடப்பட்டுள்ள முதலாவது மரணம் பெப்ரவரி 6 ஆம் திகதியே இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி 6 ஆம் திகதியே அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மரணச் சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. மற்றையவர் 67 வயதான ஒருவர். அவர் ஹோமாகமவை சேர்ந்தவர். அவர் ஏப்ரல் முதலாம் திகதி மரணித்துள்ளார். எனினும், அந்த மரணமும் ஜுன் 11 ஆம் திகதி என்றே கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. அவரும் அந்த 101 மரணங்களில் உள்ள ஒருவர். தொலைக்காட்சிகளுக்கு தகவல்களை வழங்கும் நிபுணர்களுக்கு இது தெரியாது. சரியான பதிவுகளை மேற்கொள்ளுமாறு அண்மையில் நான் கூறினேன். அவ்வாறு செய்த பின்னர் தற்போது இரண்டு பட்டியல்களிலும் மாற்றம் உள்ளது. அறிக்கையிடலில் மாற்றம் ஏற்ட்டுள்ளது.
என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் 11 ஆம் திகதி 101 பேர் மரணித்ததாக கூறப்பட்ட போதிலும் அன்றைய தினம் 15 பேரே மரணித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்நிலையில், எதிர்வரும் 21 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும், மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டதிட்டங்கள் அவ்வாறே அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வரையறுக்கப்பட்ட பணியார்களுடன் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிகளை முன்னெடுத்துச் செல்வது நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளின் பொறுப்பாகும். வர்த்தக மற்றும் பொருளாதார செயற்பாடுகளும் வரையறுக்கப்பட்ட சிலரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.