விலை உறுதிப்படுத்தல் நிதியம்; கணக்காய்வு ஆரம்பம்

எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதியம் தொடர்பில் கணக்காய்வு

by Staff Writer 18-06-2021 | 3:45 PM
Colombo (News 1st) எரிபொருளின் விலையை ஸ்திரமாகப் பேணுவதற்கு ஆரம்பிக்கப்பட்ட நிதியம் தொடர்பில் கணக்காய்வை ஆரம்பித்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவாக காணப்பட்ட போது, அதற்கு இணையாக நாட்டில் எரிபொருளின் விலையை திருத்தாமையால் கிடைக்கப்பெறும் மேலதிக பணத்தை சேமிப்பதற்காக இந்த நிதியத்தை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டது. உலக சந்தையில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் போது எரிபொருளின் விலையை அதிகரிக்காமல் அந்த நிதியைப் பயன்படுத்தி மக்களின் சுமையைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். எனினும் கடந்த நாட்களில் எரிபொருளின் விலை சர்வதே சந்தையில் அதிகரித்த நிலையில் அவ்வாறான ஒரு நிதியம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டு அவ்வாறான நிதியம் ஸ்தாபிக்கப்பட்டு 69.2 பில்லியன் ரூபா பணம் நிதியத்தின் சேமிப்பில் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதில் 47.5 பில்லியன் ஆரம்ப நிதியை மத்திய வங்கியின் திறைசேறி பத்திரம் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த நிதியில் 48 பில்லியன் ரூபாவை இலங்கை மின்சார சபை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு கடனைச் செலுத்துவதற்கு பயன்படுத்தியுள்ளதாக மத்திய வங்கியால் வௌிக் கொண்டு வரப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் திறைசேறி பத்திரங்களை செலுத்துவதற்கு மேலும் 21 பில்லியன் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பெற்றோல் மற்றும் டீசலுக்கான இலாபத்தை நீக்கியமையால் நிதியத்திற்கான வருமான வழி அற்றுப்போனதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.