உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

by Bella Dalima 18-06-2021 | 5:36 PM
Colombo (News 1st) உலகில் வைரங்களை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஆப்பிரிக்கா நாடான போட்ஸ்வானாவும் ஒன்று. உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் 2017 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவுடையது. இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் பருமன் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த முதலாம் திகதி அரசாங்கத்தின் துணையுடன் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட வைரத்தை போட்ஸ்வானா அதிபர் மோக்விட்சி கையில் வைத்திருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல கோடி ரூபா மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போட்ஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.