மீனவர்கள் மீது தாக்குதல்: இந்தியா நிராகரிப்பு

இலங்கை மீனவர்கள் மீது இந்திய கடற்படை தாக்குதல்: உயர்ஸ்தானிகராலயம் நிராகரிப்பு 

by Bella Dalima 18-06-2021 | 11:20 PM
Colombo (News 1st) சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை மீனவர்கள் சிலர் மீது இந்திய கடற்படை என சந்தேகிக்கப்படும் ஒரு தரப்பு தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தை இந்திய உயர்ஸ்தானிகராலயம் நிராகரித்துள்ளது. இந்திய கடற்படையினர் கடும் ஒழுக்கக் கட்டுப்பாடும் பொறுப்புமுடையவர்கள் என்பதால், ஒருபோதும் அவ்வாறு செயற்படமாட்டார்கள் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மனிதாபிமான ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்பிற்கும் ஏற்ற திட்டத்தை தயாரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது இந்திய கடற்படை தாக்கியதில் காயமடைந்ததாக நேற்று கரைக்கு வந்த மீனவர்கள் சிலர் தெரிவித்ததுடன், அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மே 7 ஆம் திகதி திக்கோவிட்ட பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்கு படகில் கடலுக்கு சென்ற 13 பேர் கொண்ட மீனவர் குழுவே இந்த சம்பவத்தை எதிர்கொண்டது.