Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குல் தொடர்பிலான பிரதான சந்தேகநபர்களுக்கு எதிராக ஜூலை மாதமளவில் வழக்குத்தாக்கல் செய்ய எண்ணுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று தெரிவித்தார்.
இந்த தாக்குதல் தொடர்பில் 8 கோவைகள் கடந்த வருடம் நவம்பர் மாதம் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த பெப்ரவரி மாதம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக 54 அதிகாரிகள் மார்ச் மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரை இரவு பகலாக பிரதி சொலிசிட்டர் ஜெனரலின் கீழ் செயற்பட்டதாகவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.
மேலும், பகுப்பாய்வாளரின் மற்றுமொரு அறிக்கையை பெற வேண்டும் எனவும் தற்போது 75 வீதமான விடயங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட சரத் வீரசேகர, எஞ்சிய ஆவணங்களும் வழங்கப்பட்டவுடன் ஜூலை மாதமளவில் வழக்குத்தாக்கல் செய்ய முடியும் என நம்புவதாகக் கூறினார்.
இதேவேளை, இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளதாகக் கூறப்படும் சாரா தொடர்பில் சரத் வீரசேகர பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
சாரா என்ற பெண் உயிர் வாழ்கிறாரா, இல்லையா என்பது இன்னும் உறுதியில்லை. அவர் உயிருடன் உள்ளார் என கூறப்பட்ட சாட்சியங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளன. அவை அனைத்தும் தவறு என உறுதியாகியுள்ளன. இது தொடர்பில் இரண்டு தடவைகள் மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீண்டும் ஒரு தடவை தோண்டி மரபணு பரிசோதனை மேற்கொள்ள சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. சாரா உயிர் வாழ்கிறார் என்பதற்கான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை. அத்துடன் சஹ்ரானின் மனைவியான ஹாதியாவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குண்டுத்தாக்குலை மேற்கொண்ட பயங்கரவாதியுடன் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இருந்ததாக சாட்சியங்கள் இல்லை.