by Staff Writer 17-06-2021 | 2:20 PM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசகர மற்றும் எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுகத் மெண்டிஸ் ஆகிய இருவருக்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நேற்று பிறப்பிக்கப்பட்ட பிணை நிபந்தனை, கம்பஹா மேல் நீதிமன்றத்தில் இன்று (17) பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஷானி அபேசேகரவை விடுதலை செய்யுமாறு வெலிக்கடை சிறை அத்தியட்சகருக்கும் சுகத் மென்டிசை விடுதலை செய்யுமாறு மஹர சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கும் கம்பஹா இலக்கம் இரண்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.வை மாபா பண்டார இன்று உத்தரவிட்டுள்ளார்.
25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் இரண்டு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன, ஆர்.குருசிங்க ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர்.
பிணை நிபந்தனைக்கு மேலதிகமாக, சந்தேகநபர்களின் வௌிநாட்டு கடவுச் சீட்டுக்களை கம்பஹா மேல் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
அதற்கமைய ஷானி அபேசேகரவின் பிணைதாரர்களாக , ஷானி அபேசேகரவின் இரண்டு மகன்கள் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்தனர்.
சுகத் மென்டிஷின் பிணைதாரர்களாக அவரின் மனைவியும் மகனும் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்துள்ளனர்.
சந்தேகநபர்களின் கடவுச் சீட்டுக்கள் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், நீதிமன்ற அனுமதியின்றி வௌிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பொய் சாட்சி உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கையை கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றம் நிராகரித்தது.
பிணை கோரிக்கையை நிராகரித்து கம்பஹா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்த, மேன்முறையீட்டு நீதிமன்றம் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நேற்று உத்தரவிட்டது.