வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை

வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை: முதன்முறையாக ஏற்றுக்கொண்ட கிம் ஜாங் உன்

by Bella Dalima 17-06-2021 | 6:31 PM
Colombo (News 1st) வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக முதன்முறையாக அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மூத்த தலைவர்களுடனான சந்திப்பின் போது, "நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது" என கிம் தெரிவித்துள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி, அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாய உற்பத்தி இலக்கை அடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா தொற்று பரவலைத் தடுக்க வட கொரியா தனது எல்லைகளை மூடியது. இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது. வட கொரியா தனது உணவு, எரிபொருள் மற்றும் உரத்திற்கு சீனாவை சார்ந்துள்ளது. மேலும், வட கொரியாவின் அணு திட்டங்களால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளாலும் அந்நாடு தடுமாறி வருகிறது.       Source: BBC