பருவப்பெயர்ச்சியின் பின்னரே சிதைவுகளை அகற்றலாம்

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே X-Press Pearl கப்பலின் சிதைவுகளை அப்புறப்படுத்த முடியும் என அறிவிப்பு

by Staff Writer 17-06-2021 | 10:27 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்திற்கு அருகே தீப்பற்றிய X-Press Pearl கப்பல் தற்போது முற்றாக மூழ்கியுள்ளதாக கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எதிர்கால நடவடிக்கைகளை பொறுப்பு வாய்ந்த நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதற்கு கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் தற்போது தயாராகி வருகின்றது. தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் பின்னரே கப்பல் தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் கப்பலின் சிதைவுகளை அப்புறப்படுத்த முடியும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கப்பலில் தீப்பற்றியதன் பின்னர் நாட்டின் பல்வேறு கரையோரங்களில் இறந்த நிலையில் கடலாமைகள், திமிங்கிலங்கள், டொல்பின்கள் கரையொதுங்கின. மன்னார் - தாழ்வுபாடு கடற்கரையில் இரண்டு கடலாமைகள் இன்று கரையொதுங்கியிருந்தன. இதில் ஒரு கடலாமை சுமார் 60 கிலோகிராம் எடையை கொண்டிருந்ததுடன், மற்றுமொரு கடலாமை காயங்களுடன் காணப்பட்டது. முந்தல் - சின்னப்பாடு, பாரிபாடு, புதுப்பாடு கரையோரங்களில் இதுவரை ஆறு கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன. புத்தளம் - தழுவ பகுதியிலும் நேற்று (16) மாலை கடலாமையொன்று கரையொதுங்கியது. இலங்கையின் கரையோரப் பகுதிகளில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமைகளின் எண்ணிக்கை 40-ஐ தாண்டியுள்ளது. இதேவேளை, நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்டை பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதியில் 5 அடி நீளமான டொல்பின் ஒன்று இறந்த நிலையில் இன்று மாலை கரையொதுங்கியது. வன ஜீவராசிகள் அதிகாரிகளிடம் டொல்பின் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஏனைய செய்திகள்