சின்னப்பாடு கடற்கரையில் 2 படகுகள் கரையொதுங்கின

சின்னப்பாடு கடற்கரையில் 2 படகுகள் கரையொதுங்கின

by Staff Writer 17-06-2021 | 9:21 PM
Colombo (News 1st) புத்தளம் - முந்தல், சின்னப்பாடு கடற்கரைப் பகுதியில் இரண்டு படகுகள் கரையொதுங்கியுள்ளன. இவை இந்திய படகுகள் என சந்தேகிக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (17) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் இதனை அவதானித்துள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். 30 அடி நீளமும் 6 அடி அகலமும் கொண்ட இந்த படகுகள் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தாத படகு வகையைச் சேர்ந்தவை என அவர் சுட்டிக்காட்டினார் குறித்த படகுகளின் இயந்திரங்கள் அண்மையில் அகற்றப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதேவேளை, சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இந்திய கடற்படையினர் தாக்கியததாக தெரிவித்து, காயமடைந்த இலங்கை மீனவர்கள் சிலர் இரண்டு படகுகளில் திக்கோவிட்ட துறைமுகத்தை வந்தடைந்தனர். கடந்த மே மாதம் 7 ஆம் திகதி கடலுக்கு சென்ற 13 மீனவர்களே இந்த படகுகளில் திரும்பியுள்ளனர். ஜூன் மாதம் 4 ஆம் திகதி இந்திய கடற்படையினர் படகுகளுக்குள் பிரவேசித்து போதைப்பொருள் உள்ளதா என வினவி சோதனை நடத்தியதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.