கொழும்பில் சிலருக்கு இந்திய கொரோனா வைரஸ் திரிபு

இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

by Bella Dalima 17-06-2021 | 6:04 PM
Colombo (News 1st) இந்தியாவில் பரவும் டெல்டா எனப்படும் கொரோனா வைரஸ் திரிபுடன் கொழும்பில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து பெறப்பட்ட சிலரின் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்திய போது இவ்விடயம் கண்டறியப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நிர்பீடனம், உயிரணு தொடர்பான கற்கை நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்தார். கொழும்பு - 9, அராமயா என்ற இடத்தில் பெறப்பட்ட 9 மாதிரிகளுடன் கொழும்பின் ஏனைய சில பகுதிகளிலும் கராப்பிட்டிய மற்றும் மட்டக்களப்பிலும் பெறப்பட்ட மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கலாநிதி சந்திம ஜீவந்தர குறிப்பிட்டார். இதன்போது கொழும்பு - 9, அராமயா பகுதியில் பெறப்பட்ட மாதிரிகள் ஐந்தில் டெல்டா ((B.1.617.2/Indian variant)தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கராப்பிட்டிய, மட்டக்களப்பு, வெள்ளவத்தை, கொழும்பு - 8 மற்றும் கொழும்பு - 10 இல் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் பிரிட்டனில் பரவும் கொரோனா திரிபான அல்ஃபா (B.1.1.7) கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய திரிபாக முன்பு அடையாளப்படுத்தப்பட்ட டெல்டா திரிபு தொற்றுக்குள்ளான இருவர் ஏற்கனவே இலங்கையில் பதிவாகியிருந்தனர். எனினும், அந்த இருவரும் விமான நிலையத்திலிருந்து நேரடியாக தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்பதால், சமூகத்தில் அந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படவில்லை என அப்போது தெரிவிக்கப்பட்டது.