ஷானி அபேசேகரவிற்கு பிணை 

ஷானி அபேசேகரவிற்கு பிணை 

by Staff Writer 16-06-2021 | 10:24 AM
Colombo (News 1st) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுகத் மென்டிஸ் ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. ஷானி அபேசேகரவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பதற்கான சான்றுகள் காணப்படுவதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து, ஷானி அபேசேகர, உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுகத் மென்டிஸ் ஆகியோரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 25,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் இரண்டு சந்தேகநபர்களையும் விடுவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம், கம்பஹா மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் அனுமதியின்றி சந்தேகநபர்கள் வௌிநாடுகளுக்கு செல்ல முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிராக பொய் சாட்சி உருவாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பத்து மாதங்களுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷானி அபேசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கையை கடந்த டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி கம்பஹா மேல் நீதிமன்றம் நிராகரித்தது. பிணை கோரிக்கையை நிராகரித்து கம்பஹா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இரத்து செய்து, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன, ஆர். குருசிங்க ஆகியோர் சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க இன்று உத்தரவிட்டுள்ளனர்.