Colombo (News 1st) மே மாதம் 21 ஆம் திகதி X-Press Pearl கப்பலில் தீ பரவியதிலிருந்து இதுவரை 40-க்கும் மேற்பட்ட கடலாமைகளின் உடல்களும் 05 டொல்ஃபின்களின் உடல்களும் கரையொதுங்கியுள்ளன.
இன்றும் இறந்த நிலையில் ஐந்து கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன.
களுத்துறை, வடக்கு கடற்கரையில் ஒரு கடலாமையின் உடல் கரையொதுங்கியது.
மொரகொல்லயில் மற்றுமொரு கடலாமை கரையொதுங்கியுள்ளதுடன், அதனை அண்மித்த கடற்பரப்பில் மிதந்த மற்றுமொரு கடலாமையின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
வாதுவ கடற்கரையிலும் கடலாமையொன்று கரையொதுங்கியுள்ளது.
புத்தளம் - பூனைப்பிட்டி பாரிபாடு கடற்கரையோரத்தில் காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமை ஒன்று நேற்று இரவு கரை ஒதுங்கியுள்ளது. சுமார் மூன்று அடி நீளமுடைய 50 கிலோகிராம் எடையுடைய கடலாமையே கரையொதுங்கியுள்ளது.
மொரட்டுவை - லுனாவ கடற்கரையிலும் கடலாமை ஒன்றின் உடல் காணப்பட்டது.
டொல்பின் ஒன்றின் உடல் இரத்மலானையில் கரையொதுங்கியுள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு - கொக்குளாய் கடற்கரையில் பாரிய சுறா மீன் ஒன்று இன்று மீனவர்களின் வலையில் சிக்கியது.
மீனவர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு சுறாவை மீண்டும் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.