by Bella Dalima 16-06-2021 | 5:00 PM
Colombo (News 1st) பாலத்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தினரின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலைத் தொடங்கியிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இன்று (16) அதிகாலை முதல் காசா நகரில் குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைக் கேட்க முடிவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று காசா பகுதியில் இருந்து வெடிபொருட்களைக் கொண்ட தீப்பற்றும் பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டன. இதனால் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத்துறை குறிப்பிட்டுள்ளது.
காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் .உருவாகியிருக்கிறது.
ஹமாஸ் இயக்கத்தின் வானொலி நிலையம், பாலஸ்தீன பயிற்சி முகாமை குறி வைத்து பலூன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கம் நேற்று முன்தினம் பதவி ஏற்றது. பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றார். இந்த நிலையில் புதிய அரசு பொறுப்பேற்ற மறுநாளே காசா முனை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.