எரிபொருள் விலையேற்றம்: நிலைப்பாட்டில் மாற்றமில்லை

எரிபொருள் விலையேற்றம் தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை: சாகர காரியவசம்

by Bella Dalima 16-06-2021 | 9:12 PM
Colombo (News 1st) எரிபொருள் விலையேற்றம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இன்று தெரிவித்தார். கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அவசர சந்திப்பில் கலந்துகொள்வதற்காக சென்ற போதே அவர் இதனைக் கூறினார். பத்தரமுல்லை, நெலும்மாவத்தையில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த கலந்துரையாடல் நடைபெற்றதுடன், பின்னர் பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர். பசில் ராஜபக்ஸ இருந்திருந்தால் எரிபொருள் விலையை அதிகரித்திருக்க விட்டிருக்க மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார். எரிபொருள் விலையேற்றத்தை ஜனாதிபதி மீதோ பிரதமர் மீதோ சுமத்த வேண்டியதில்லை, சிலரின் நிலைப்பாடு கட்சியின் நிலைப்பாடு இல்லை என பொதுஜன பெரமுனவின் பராளுமன்ற உறுப்பினர் சிந்தக்க மாயாதுன்னே தெரிவித்தார்.