இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா?

இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா?

இலங்கை பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதா?

எழுத்தாளர் Staff Writer

16 Jun, 2021 | 10:22 pm

Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, 2019 ஆம் ஆண்டின் இறுதியளவில் இலங்கையிம் 7.6 பில்லியன் டொலர் கையிருப்பு இருந்ததுடன், கடந்த வருட இறுதியில் அது 5.7 பில்லியன் டொலராக குறைவடைந்தது.

இந்த வருடத்தின் மார்ச் மாத இறுதியில் அந்த இருப்பு 4.1 பில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

வெளிநாட்டு கடன் தவணை, பங்குச்சந்தை முதலீடுகள் மீளப்பெறப்பட்டமை காரணமாக நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்நியச்செலாவணியும் இங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்கு முக்கியமாக அந்நியச்செலாவணி கிடைக்கும் வழிமுறையான சுற்றுலாத்துறை ஊடாக 2019 ஆம் ஆண்டு 3.6 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்தாலும் கடந்த வருடத்தில் 0.7 பில்லியன் டொலர் மாத்திரமே கிடைத்திருந்தது.

கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் போக்குவரத்து ஊடாக 2019 ஆம் ஆண்டு 2.3 பில்லியன் டொலர் கிடைத்திருந்தாலும் கடந்த வருடம் அந்த வருமானம் 1.2 பில்லியன் டொலர் வரை குறைவடைந்தது.

2020 ஆம் ஆண்டில் அரசாஙகம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன், நேரடி முதலீடுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட பரிமாற்ற வசதி ஊடாக மூன்று பில்லியன் டொலர் கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும், அரச கடன் செலுத்தப்பட்டமை, முதிர்ச்சியடைந்த இறையாண்மை வரிகளுக்கு செலுத்தப்பட்ட நிதி, அரச பிணை முறிகள், பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியமை காரணமாக 4.2 பில்லியன் டொலர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளது.

வெளிநாட்டு நிதி சந்தையில் இருந்து கடன் பெறுவதற்கு பதிலாக அரசாங்கம் தற்போது நட்பு நாடுகளிடமிருந்து நாணய பரிமாற்ற வசதிகளை பெற்றுக்கொள்கின்றது.

இதற்கமைய, சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன நாணயமும், இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலரும் பெறப்பட்டுள்ளது.

இந்த வருடத்தில் 3.7 பில்லியன் அமெரிக்க டொலரை அரசாங்கம் வெளிநாட்டுக் கடனுக்காக செலுத்த வேண்டியுள்ளதுடன் அதில் 1.3 பில்லியன் டொலர் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அண்மையில் அறிவித்தது.

இதற்கமைய, இன்னும் 2.4 பில்லியன் டொலரை இந்த வருடம் மத்திய வங்கி செலுத்த வேண்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்புரிமைக்காக 780 மில்லியன் டொலர்களையும் இந்திய பரிமாற்ற வசதியின் கீழ் 500 மில்லியன் டொலர்களையும் பங்களாதேஷ் பரிமாற்ற வசதியின் கீழ் 200 மில்லியன் டொலர்களையும் பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்