கப்பலின் இலங்கை பிரதிநிதியை கைது செய்ய ஆலோசனை

X-Press Pearl கப்பலின் இலங்கை பிரதிநிதியை கைது செய்யுமாறு ஆலோசனை 

by Staff Writer 15-06-2021 | 11:36 AM
Colombo (News 1st) X-Press Pearl கப்பலின் இலங்கைப் பிரதிநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்ட மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். குறித்த இலங்கை பிரதிநிதியை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரின் அலுவலகம் மற்றும் வீடு ஆகியன சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் அப்பகுதிகளில் இருக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கப்பலின் இலங்கைக்கான பிரதிநிதியை கைது செய்வதற்கு சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளன​ர். இதேவேளை, கப்பல் தீப்பற்றியதால் உயிரிழந்ததாக கூறப்படும் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் ஆகியவற்றின் உடற்கூற்று பரிசோதனைகளை முன்னெடுத்த வைத்தியரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் குழுவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரசாயன திணைக்கள பகுப்பாய்வாளரின் அறிக்கை வெளியானதன் பின்னரே உயிரினங்களின் மரணங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.