கடல்வாழ் உயிரினங்களின் உடல்கள் கரையொதுங்கின

கடல்வாழ் உயிரினங்களின் உடல்கள் இன்றும் கரையொதுங்கின

by Staff Writer 15-06-2021 | 1:15 PM
Colombo (News 1st) யாழ். ஊர்காவற்றுறை - சுருவில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் திமிங்கிலமொன்றின் உடல் கரையொதுங்கியுள்ளது. சுமார் 20 அடி நீளமுள்ள திமிங்கிலம் இன்று (15) காலை கரையொதுங்கியிருந்துள்ளதுடன் அப்பகுதி மக்கள் கடற்றொழில் திணைக்களத்திற்கு இது குறித்து அறிவித்துள்ளனர். இதேவேளை, மன்னார் - வங்காலை பகுதியில் ஆமையொன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. 15 கிலோகிராம் எடை கொண்ட கடலாமை நேற்றிரவு கரையொதுங்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். குறித்த கடலாமையின் ஓடு மற்றும் இரண்டு கால்களும் சிதைவடைந்துள்ளன. இதனுடையே, புத்தளம் - முந்தல் - சின்னப்பாடு கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்றின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. நேற்று மாலை கரையொதுங்கிய சுமார் 3 அடி நீளமுடைய கடலாமையின் சில உறுப்புகள் சிதைவடைந்த நிலையில் காணப்பட்டதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். முந்தல் பகுதியில் இதுவரை உயிரிழந்த நான்கு கடலாமைகளும் டொல்பின் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.