நட்டஈடு பெறுவதற்காக கப்பலில் தீ பரவ சந்தர்ப்பமளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

நட்டஈடு பெறுவதற்காக கப்பலில் தீ பரவ சந்தர்ப்பமளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

நட்டஈடு பெறுவதற்காக கப்பலில் தீ பரவ சந்தர்ப்பமளிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2021 | 10:51 pm

Colombo (News 1st) MV X-Press Pearl கப்பல் தொடர்பிலான நீதிமன்ற உத்தரவுகளை கவனத்திற்கொள்ளாது செயற்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவதூறு குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான இயலுமை விசாரணை அதிகாரிகளுக்கு உள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனா அபேவிக்ரம இன்று தெரிவித்தார்.

கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதி தமது நிறுவனத்தில் உள்ள மின்னஞ்சல் பதிவுகளின் பிரதியை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்காமை தொடர்பாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் முன்வைத்த விளக்கத்தை கவனத்திற்கொண்டே நீதவான் இந்த விடயத்தை கூறினார்.

உள்நாட்டு பிரதிநிதியான Sea Consortium Lanka PVT Ltd நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராக செயற்படுகின்ற அர்ஜுன ஹெட்டிஆரச்சிக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்குமாறும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் கோரிக்கை விடுத்தார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அர்ஜுன ஹெட்டிஆரச்சியை நாளை காலை 9.30-க்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இந்த கப்பலின் கெப்டன் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கிடையிலான தொடர்பாடல்கள் துறைமுக அதிகார சபையின் தொடர்பாடல் பிரிவிலும் பதிவாவதாக நிறுவனம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன கூறினார்.

எனினும், இந்த அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் எந்தவொரு B அறிக்கையிலும் அது குறித்து குறிப்பிடப்படவில்லை எனவும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

குறித்த தொடர்பாடல் தரவுகள் குறித்து ஆராய்ந்து விசாரணை நடத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, நட்டஈடு பெறும் நோக்கில் துறைமுக அதிகார சபை,  கப்பலில் ஏற்பட்ட தீ பரவுவதற்கு சந்தர்ப்பமளித்ததாக MV X-Press Pearl கப்பலின் கெப்டன் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன நேற்று (14) மேல் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கப்பல் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் கெப்டன், கொழும்பு துறைமுகத்தின் ஹார்பர் மாஸ்டருக்கு அறிவித்திருந்ததாக அவர் கூறினார்.

இலங்கை துறைமுக அதிகார சபை சட்டத்தின் கீழ் இந்த கப்பலை ஆழ்கடலை நோக்கி அனுப்பி வைப்பதற்கான அதிகாரம் ஹார்பர் மாஸ்டருக்கு இருந்ததாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

எவ்வாறாயினும், கப்பலின் கெப்டனும் பணியாளர்களும், கொள்கலனில் ஏற்பட்டிருந்த அமிலக் கசிவு தொடர்பிலான தகவல்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும்போது மறைத்திருந்ததாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் நேற்று மேல் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்