மசகு எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டம் 

மசகு எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டம் 

மசகு எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து இலத்திரனியல் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்க அரசு திட்டம் 

எழுத்தாளர் Staff Writer

14 Jun, 2021 | 9:15 pm

Colombo (News 1st) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற மசகு எண்ணெய் மீது தங்கியிருக்கும் நுகர்வு முறைமையை மாற்றுவதற்கான பல யோசனைகளை செயற்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எண்ணெய் விலை அதிகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தி நேற்று (13) மாலை வெளியிட்ட அறிக்கையில், எரிபொருளில் பயணிக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதை முற்றாக தடை செய்வதற்கான யோசனையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்காக அதிகளவில் அந்நிய செலாவணி செலவிடப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் எரிபொருள் இறக்குமதிக்காக 3,677 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்று ஏற்பட்ட காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்டிருந்த போதும், உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்திருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு 3,677 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடம் எரிபொருள் இறக்குமதிக்காக 4000 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

எரிபொருள் இறக்குமதிக்காக பாரியளவு நிதி ஒதுக்கப்படும் போது, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இரண்டு அரச வங்கிகளுக்கு 652 பில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில், இறக்குமதி செய்யப்படுகின்ற மசகு எண்ணெய் மீது தங்கியிருக்கும் நுகர்வு முறைமையை மாற்றுவதற்கான பல யோசனைகள் காணப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருளை பயன்படுத்தி செலுத்தும் வாகனங்களை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்தி, இலத்திரனியல் வாகன பயன்பாட்டை அறிமுகப்படுத்துதல்,
முச்சக்கர வண்டிகளுக்கு இலத்திரனியல் என்ஜின்களை பெற்றுக்கொடுத்தல், களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தை இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையமாக மாற்றுதல், ரயில் போக்குவரத்தை இயலுமானவரை மின்சார சக்தியில் செயற்படும் வகையில் மாற்றியமைத்தல், அனைத்து வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகள் உள்ளிட்ட அரச கட்டடங்களுக்கும் சூரிய சக்தி மின்கலத்தை பெற்றுக்கொடுத்தல் எனும் யோசனைகளை செயற்படுத்துவதனூடாக எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடும் நிதியை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்