by Staff Writer 14-06-2021 | 10:16 AM
Colombo (News 1st) இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாஹுவின் 12 வருட கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கமைய, அந்நாட்டின் புதிய பிரதமராக தேசிய வலதுசாரி கட்சியின் Naftali Bennett தெரிவாகியுள்ளார்.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை அவர் இஸ்ரேலின் பிரதமராக செயற்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கான ஆட்சி அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் யயர் லபிட்டிடம் (Yair Lapid) அவர் ஒப்படைக்கவுள்ளார்.
இஸ்ரேலின் நீண்டகால பிரதமராக பெஞ்சமின் நெதன்யாஹு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக பதவியில் இருந்து வந்தார்.
அங்கு இரண்டு ஆண்டுகளாக 04 தடவைகள் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதுடன் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் மொத்தமுள்ள 120 இடங்களில் பெஞ்சமின் நெதன்யாஹு கட்சி 30 இடங்களை கைப்பற்றியது.
தனிப்பெரும் கட்சியாக வந்தபோதும் அவரால் கூட்டணி அரசு அமைக்க முடியவில்லை.
இதனால் ஆட்சியில் இழுபறி நிலைமை நீடித்தது.
இதனிடையே, அங்கு 8 எதிர்க்கட்சிகள் ஒன்றாய் கரம் கோர்த்து ஆட்சி அமைக்க இணக்கப்பாடு எட்டப்பட்டதுடன் இந்த கூட்டணியை யேஷ் அதிட் கட்சியின் தலைவர் யெயிர் லாப்பிட் அறிவித்தார்.
சுழற்சி முறையில் பிரதமர் பதவி வழங்கப்படுமெனவும் முதலில் யமினா கட்சியின் தலைவரான நப்தாலி-பென்னட் பிரதமர் பதவியை ஏற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் யமினா கட்சி தலைவர் நப்தாலி பென்னட் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து, இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி-பென்னட் தெரிவாகியுள்ளதுடன் அவரது அமைச்சரவையில் 27 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
அவர்களில் 9 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய பிரதமரின் வெற்றிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.