60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

சவுதி அரேபியாவை சேர்ந்த 60,000 பேருக்கு மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

by Bella Dalima 13-06-2021 | 5:22 PM
Colombo (News 1st) முஸ்லிம்களின் புனிதத் தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அடுத்த மாதம் (ஜூலை) ஆரம்பமாகிறது. இந்த புனித யாத்திரைக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு நேற்று (12) வெளியிட்டது. அதன்படி, இந்த ஆண்டு சவுதி அரேபியாவை சேர்ந்த 60,000 பேர் மட்டுமே ஹஜ் யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித யாத்திரை பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது, ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசித்து வந்த வெளிநாட்டினர் 1000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.