கடற்றொழிலில் ஈடுபட முடியாதுள்ளோருக்கு கொடுப்பனவு

X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடற்றொழிலில் ஈடுபட முடியாதுள்ளவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு

by Bella Dalima 12-06-2021 | 2:17 PM
Colombo (News 1st) விபத்திற்குள்ளான X-Press Pearl கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) முதல் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார். சுற்றுச்சூழல், மீன்வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி, கப்பல் தீயினால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பிடவும், சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனத்திடமிருந்து முழு இழப்பீட்டைப் பெறுவதற்கும், கப்பலை வெளியேற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். தேவையான சட்ட நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் தலைமையில் முன்னெடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இதேவேளை, கப்பலில் தீ பரவியமையால் சுற்றுலாத்துறைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 15 சுற்றுலா வலயங்களில் 08 வலயங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க குறிப்பிட்டார். கடல், கரையாரம் மற்றும் கரையை அண்மித்த சூழல் கட்டமைப்பு சுற்றுலாத்துறைக்கு பாரிய பங்களிப்பை வழங்குகிறது. வெளிநாட்டவர்களுக்கு கடலுணவில் பாரிய விருப்பம் காணப்படுகின்ற போதிலும், தற்போதைய நிலையில் நாட்டின் கடல் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலால் அதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கூறினார். இந்நிலையில், கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் MV X-Press Pearl கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்படுகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று செல்லவுள்ளது. கப்பல் மூழ்கும் இடத்தை விசேட குழுவினர் கண்காணித்ததன் பின்னர், அங்கிருந்து நீர் மாதிரிகளை பெறவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவினரால் பெறப்படும் நீர் மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.