இந்தியாவில் 61 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்காக இந்தியா சென்றிருந்த 61 இலங்கையர்கள் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் கைது

by Bella Dalima 12-06-2021 | 1:45 PM
Colombo (News 1st) சட்டவிரோதமாக வெளிநாடு செல்வதற்காக இந்தியா சென்றிருந்த இலங்கை பிரஜைகள் 61 பேர் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் சட்டவிரோதமாக கனடாவிற்கு படகு மூலம் செல்வதற்கு முயற்சித்த இலங்கையை சேர்ந்த 23 இளைஞர்கள் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து நேரடியா கனடாவிற்கு செல்வதற்கு பாரிய நெருக்கடிகள் காணப்படுவதால், மதுரையிலிருந்து படகு மூலம் கனடா செல்ல திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 23 இளைஞர்களும் சுமார் 40 நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி ஊடாக மதுரையை சென்றடைந்ததாக “த ஹிந்து” செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக்கு சென்ற இலங்கை பிரஜைகள் அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் தொழில்புரிந்த நிலையில், கனடாவிற்கு செல்ல தயாராகிய போது Q-பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, கர்நாடகா மங்களூர் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்கு சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டு காவல்துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, மங்களூரில் தங்கியிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவி புரிந்த இந்திய பிரஜைகள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை, தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக பயணிக்க முயற்சித்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடிக்கு அருகே வௌ்ளப்பட்டி கரையோரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இங்கிலாந்து பிரஜையை Q-பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கோவாவிலுள்ள பெண்ணொருவரை திருமணம் முடித்துள்ள குறித்த நபர் படகு மூலம் இலங்கைக்கு வர முயற்சித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக “தி ஹிந்து” செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மும்பை, கோவா, பகுதிகளில் பாரியதொகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்ட ஒருவரே நேற்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தூத்துக்குடி இலக்கம் ஒன்று நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்