கீரிமலை மாளிகையை வெளியாருக்கு வழங்க எதிர்ப்பு

கீரிமலை ஜனாதிபதி மாளிகையை வெளியாருக்கு வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

by Staff Writer 12-06-2021 | 12:13 AM
Colombo (News 1st) அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற செலன்திவ முதலீட்டுத் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் - கீரிமலையில் மக்களின் நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை கூறுவிலை கோரல் மூலம் வெளியாருக்கு வழங்கப்படவுள்ளமை தற்போது பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. யாழ். மாநகரத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும், இந்திய முதலீட்டில் விஸ்தரிக்கப்பட்ட பலாலி விமான நிலையத்திலிருந்து சுமார் 5.5 கிலாமீட்டர் தொலைவிலும் கீரிமலை ஜனாதிபதி மாளிகையின் அமைவிடம் உள்ளது. செலன்திவ ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் அசையா சொத்து அபிவிருத்தியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள, காங்கேசன்துறையிலுள்ள சர்வதேச இணைப்பு நிலையம் அமைந்துள்ள 5 ஏக்கர் பகுதி முதலீட்டுக்காக வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தொடர்ந்தும் கடற்படையினரின் வசமுள்ள கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சர்வதேச விருந்தினருக்கான சந்திப்பு நிலையம் எனும் பெயரில் இலங்கை முதலீட்டு சபை ஏலத்தில் வழங்கவுள்ளதாக காலைக்கதிர் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார். மக்களின் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அரசாங்கம் அந்தப் பகுதியை எவ்வாறு மற்றவர்களுக்கு வழங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். யாழில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானமும் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்தார். “இந்த கட்டடத்தை மாகாண சபைக்கு கையளிக்க வேண்டும் என்ற தீர்மானம் வட மாகாண சபையில் 2016 ஆம் ஆண்டு என்னால் முன்வைக்கப்பட்டது. அந்தப் பிரேரணை ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் எம்மால் அனுப்பி வைக்கப்பட்டது,” என அவர் கூறினார். பெருந்தொற்றுக் காலத்தில் அதனை அவசரப்பட்டு வழங்குவதற்கான தேவை என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பினார். குறித்த பகுதியில் கடற்படையினரால் விடுவிக்கப்படாதுள்ள காணி உரிமையாளர்களும் இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.