100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் G7 நாடுகள்

வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை வழங்கும் G7 நாடுகள்

by Bella Dalima 11-06-2021 | 8:05 PM
Colombo (News 1st) வறிய நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க G7 நாடுகள் இணங்கியுள்ளன. பிரிட்டன் சார்பில் முதல் 50 இலட்சம் தடுப்பூசிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக வழங்கப்படும் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் G7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பருவநிலை மாற்றம், பொருளாதாரம், கொரோனா பெருந்தொற்று, புவிசார் அரசியல் குறித்து விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக பெருந்தொற்று காலத்தில், பணக்கார நாடுகளான G7 நாடுகள், உலகின் பிற நாடுகளுக்கு தடுப்பூசியை நன்கொடையாக வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்நிலையில், உலகின் பிற நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை G7 நாடுகள் அளிக்கும் என பிரிட்டன் அறிவித்துள்ளது. அமெரிக்கா 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. இதில், ஐ.நா ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள COVAX திட்டத்தின் கீழ், சுமார் 80 சதவீத தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ளவை இருதரப்பு ரீதியாக பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.