லீசிங் நிறுவனங்களுக்கான மத்திய வங்கியின் ஆலோசனை

லீசிங் மற்றும் கடனுக்கான சலுகையை நீடிக்குமாறு மத்திய வங்கி ஆலோசனை

by Staff Writer 11-06-2021 | 4:15 PM
Colombo (News 1st) கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் வர்த்தக கடன்களுக்கான சலுகைகளை நீடிக்குமாறு லீசிங் நிறுவனங்கள் மற்றும் விசேட நிதி நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று (10) வௌியிடப்பட்ட விசேட சுற்றுநிரூபத்தினூடாக இலங்கை மத்திய வங்கி இதற்கான ஆலோசனைகளை முன்வைத்துள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து புதிய சுற்றுநிரூபத்தை வௌியிட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதற்கமைய, கடன் மற்றும் லீசிங் சலுகைகளை பெற விரும்பும் பயனாளர்கள், எழுத்துமூலமான விண்ணப்பத்தை எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் அல்லது குறுந்தகவலூடாக தங்களின் கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. COVID - 19 மூன்றாம் அலை காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மற்றும் தனிநபர் கடன் பெற்றவர்களுக்கும் தவணை கட்டணம் மற்றும் மாதாந்த வட்டி அறவிடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கும் உரிய சலுகைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாரேனும் ஒருவருக்கு லீசிங் அல்லது கடனுக்கான சலுகையை நீடிப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் பட்சத்தில், அதற்கான உரிய காரணத்தை நிதி நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டுயது கட்டாயமானது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அனைத்து கடன் சலுகைகளும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.