by Bella Dalima 11-06-2021 | 7:42 PM
Colombo (News 1st) தென்னாப்பிரிக்காவில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
கோசியாமி தமரா சித்தோல் எனும் பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது 8 குழந்தைகள் இருப்பது தெரிந்ததாகவும் ஆனால் பிரசவத்தின் போது 10 குழந்தைகள் பிறந்ததுள்ளதாகவும் அவரது கணவர் டெபோஹோ சோட்டேட்சி கூறியுள்ளார்.
7 ஆண் குழந்தைகளும் 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
10 குழந்தைகள் பிறந்திருப்பதை தென்னாப்பிரிக்க அதிகாரி ஒருவர் உறுதி செய்திருக்கிறார்.
10 குழந்தைகளில் 5 குழந்தைகள் இயற்கையான முறையிலும் 5 குழந்தைகள் சிசேரியன் மூலமாகவும் பிறந்திருப்பதாகவும் பெயர்கூற விரும்பாத உறவினர் ஒருவர் BBC-க்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வருவதாக கின்னஸ் உலக சாதனை அமைப்பு தெரிவித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு பெண் 8 குழந்தைகளை உயிருடன் பெற்றெடுத்ததே இதுவரை கின்னஸ் உலக சாதனையாக இருந்து வருகிறது.
கடந்த மாதம் மாலி நாட்டைச் சேர்ந்த 25 வயதான ஹலிமா சிஸே 9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிக எண்ணிக்கையான குழந்தைகள் பிறக்கும்போது பெரும்பாலும் அது குறைப் பிரவசமாக இருக்கும் என ஆப்பிரிக்காவின் சுகாதாரப் பிரிவு செய்தியாளர் ரோடோ ஒடியாம்போ குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பிரசவத்தில் மூன்றுக்கும் அதிகமான குழந்தைகள் பிறப்பது மிகவும் அரிது. கருத்தரிக்கும் சிகிச்சைகள் மூலமாகவே அது சாத்தியமாகிறது. ஆனால் 10 குழந்தைகள் பிறந்திருக்கும் சம்பவத்தில் அவை இயற்கைக் கருத்தரிப்பு முறையிலே நடந்திருப்பதாக அந்தத் தம்பதியினர் கூறுகின்றனர்.
37 வயதான சித்தோல் ஏற்கெனவே இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார். அவர்களுக்கு 6 வயதாகிறது.
பிரிட்டோரியா நகரில் கடந்த திங்கட்கிழமை நடந்த பிரசவத்திற்குப் பிறகு அவர் மிகவும் நலமுடன் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.