இலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு

இலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு

இலங்கைக்கான GSP+ வரிச் சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் மீளாய்வு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2021 | 2:53 pm

Colombo (News 1st) இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள GSP+ வரிச் சலுகை மற்றும் அதனால் கிடைக்கும் பிரதிபலன்களை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு கோரும் தீர்மானமொன்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்றம் நேற்று (10) நிறைவேற்றியது.

இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் மறுசீரமைப்பை நிறைவேற்றியமை, பலவந்தப்படுத்தல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச்செய்ய இயலாது போயுள்ளமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

GSP+ சலுகை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைக்கு ஆதரவாக 628 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளவாறு பாரியளவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை மற்றும் பின்தங்கிய நிலைமை ஏற்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் கடும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்களின் சட்டத்தரணிகளின் ஆவணங்களை முறையற்ற விதத்தில் கேள்விக்கு உட்படுத்துகின்றமை, கைது செய்தல், தடுத்து வைத்தல் என்பன தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் கடும் எதிர்ப்பு வௌியிடப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, நியாயமான வழக்கு விசாரணையை நடத்தி குற்றம் நிரூபிக்கப்படாவிட்டால் அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றுச் சட்டமொன்றை கொண்டுவருதல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான சர்வதேச மாநாட்டின் 27 பரிந்துரைகளை அமுல்படுத்துவதாக இணங்கியதற்கு அமைய, 2017 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி GSP+ வரிச் சலுகையை இலங்கை மீளப் பெற்றுக்கொண்டது.

GSP+ வரிச் சலுகை இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அதில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கிடைக்கும் ஏற்றுமதி 2.3 பில்லியன் யூரோ வரை அதிகரித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க, இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது பாரிய ஏற்றுமதி சந்தையாக மாறியுள்ளது.

எனினும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இணங்க, இந்த பிரதிபலன்கள் தொடர்பில் எதிர்காலத்தில் ஆபத்தான நிலை தோன்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்