இளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை  ஒத்திவைப்பு

மட்டக்களப்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: வழக்கு விசாரணை 14 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

by Staff Writer 10-06-2021 | 11:13 PM
Colombo (News 1st) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) இடம்பெற்றது. இதன்போது வழக்கு விசாரணை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. மட்டக்களப்பு - இருதயபுரத்தை சேர்ந்த 22 வயதான இளைஞர் பொலிஸ் காவலிலிருந்த போது கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்தார். இந்த நிலையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்தமைக்கு அதிக போதைப்பொருள் பாவனையே காரணம் என பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது. உடலில் சிறு காயங்கள் காணப்பட்ட போதிலும், அதிக போதைப்பொருள் பாவனையே உயிரிழப்பிற்கு காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பாணந்துறை வடக்கு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் 48 வயதான சாவுல் ஹமீட் முஹம்மத் அலிகான் என்பவர் அண்மையில் உயிரிழந்தார். உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இந்த மரணத்திலும் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் போது, அவர் பொலிஸ் ஜீப்பில் இருந்து தப்பிச் செல்வதற்கு முயற்சி செய்த போது அவரின் தலையில் காயம் ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கடந்த 7 ஆம் திகதி கூறியிருந்தார். சந்தேகநபரை கைது செய்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.