சமூக வலைத்தளத்தில் போலியான தகவலை பதிவிட்டவர் கைது

சமூக வலைத்தளத்தில் போலியான தகவலை பதிவிட்ட ஒருவர் கைது

by Staff Writer 08-06-2021 | 1:22 PM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக போலியான தகவலை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் என தம்மை அடையாளப்படுத்திய சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார். சந்தேகநபரை இன்று (08) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஜனாதிபதி செயலகம், வௌிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.