பேராபத்தில் சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்

மூழ்கிய கப்பலால் பேராபத்தை எதிர்கொண்டுள்ள கடல்வாழ் உயிரினங்கள்

by Bella Dalima 08-06-2021 | 11:53 PM
Colombo (News 1st) உலக சமுத்திர தினம் (8) இன்றாகும். “சமுத்திர வாழ்வியலும் வாழ்வாதாரமும்” என்ற தலைப்பில் இம்முறை உலக சமுத்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புவியில் 29 வீதம் மாத்திரமே நிலப்பரப்பு அமைந்துள்ளது. எஞ்சிய 71 வீதமும் நீரால் நிரம்பியுள்ளது. புவியில் இந்தளவு நீர் இருந்தாலும் அதில் 0.3 வீத நீரையே மக்கள் பருகக்கூடியதாக உள்ளது. 97 வீதமான நீர் உவர் நீராகக் காணப்படுகின்றமையே இதற்கு காரணமாகும். புவியில் வாழும் உயிரினங்களில் 95 வீதமானவை சமுத்திரத்தில் வாழ்கின்றன. சமுத்திரத்தின் இருப்பு உலகின் இருப்பிற்கு பெரும் பங்களிப்பு செய்கிறது. எமக்கு தேவையான ஒக்சிஜனில் 50 தொடக்கம் 85 வீதம் சமுத்திரத்தில் இருந்து கிடைப்பதுடன், 30 வீதமான கார்பனீராக்சைடையும் அது உறிஞ்சுகிறது. உலகின் மிகப்பெரிய உணவுக் களஞ்சியமாகவும், எரிபொருள் களஞ்சியமாகவும் சமுத்திரம் அமைந்துள்ளதென்றால் அது மிகையாகாது. மக்களின் இருப்பிற்கு அளவற்ற பங்களிப்பைச் செய்யும் சமுத்திரம் இன்று எதிர்நோக்கியுள்ள அச்சுறுத்தல்களோ ஏராளம். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள் கடலில் கொட்டப்படுவது அதில் முக்கியம் பெறுகிறது. உலகளாவிய ரீதியில் 8.8 மில்லியன் தொன் பொலித்தீனும் பிளாஸ்டிக்கும் வருடாந்தம் கடலில் கலக்கின்றது. இவ்வாறு உக்காத கழிவுகளை கடலில் சேர்க்கும் நாடுகளில் இலங்கையும் முன்னிலை வகிக்கிறது. இலங்கைக் கடல் நிலப்பரப்பை விட 8 மடங்கு பெரியது. இந்த கடலில் 0.24 தொடக்கம் 0.64 மில்லியன் தொன் கழிவுகள் வருடாந்தம் கலக்கின்றன. பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளால் தொடர்ச்சியாக மாசடைந்து வரும் கடல் வளத்திற்கு வரலாறு காணாத பேராபத்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. இதன் விளைவு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பதை அனுமானிப்பதும் கடினமானது. இன்றும் மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலிலுள்ள இரசாயனங்களால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படலாம் என சூழலியலாளர்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், கப்பல்கள் மூழ்குதல், விபத்திற்குள்ளாதல் சமுத்திர மாசடைதலில் நேரடித் தாக்கம் செலுத்துவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இதனைக் கூறியுள்ளார். விபத்திற்குள்ளான கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பை இழப்பீட்டின் மூலம் மதிப்பிட முடியாது என்பது தனது நம்பிக்கை எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதில் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் நாட்டின் கடற்கரைகள், கடல்வாழ் உயிரினங்கள், கடல் பல்லுயிர் பெருக்கம் மற்றும் மீன்பிடி சமூகத்தின் மீதான தாக்கத்தை அளவிட முடியாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். மீன்பிடி சமூகத்தினர் உள்ளிட்ட சமுத்திர சூழலை வாழ்வாதாரமாகக் கொண்ட இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் பொருட்டு, அதில் நேரடி தாக்கம் செலுத்தும் சமுத்திர சூழலைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கப்பல் தீப்பற்றியமையினால் நாட்டின் கடல் வளம் மற்றும் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழிவை பல நூற்றூண்டுகளுக்கு ஈடு செய்ய முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்த பாரிய குற்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவர் மீதும் பக்கசார்பின்றி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்குள் நாட்டின் கடற்கரையோரங்களில் இறந்த நிலையில் 19 கடலாமைகள் கரையொதுங்கியுள்ளன. கடைசியாக வௌ்ளவத்தை மற்றும் ரெக்கவ கரையோரப் பகுதிகளில் இறந்த கடலாமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பிராந்தியமும் நாட்டின் கரையொரப் பகுதியும் ஐந்து வகையிலான கடலாமைகளின் பிறப்பிடமாகும். கரையோரப் பகுதியில் அதிகளவில் முட்டைகளை இடும் ஆமையினமும் இதில் அடங்கும். எனினும், இன்று நாட்டின் கடற்பரப்பில் வாழும் கடலாமைகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளன. இலங்கை கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள சூழல் அழிவு காரணமாக இந்த ஆபத்து வலுவடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் MV X-Press Pearl கப்பல் தீப்பிடிக்க ஆரம்பித்து 18 நாட்கள் ஆகியுள்ளன. கப்பல் தீப்பிடிக்க ஆரம்பித்த 8 நாட்களின் பின்னர் இறந்த ஆமை ஒன்றின் உடல் கண்டெடுக்கப்பட்டதன் பின்னர் பாணந்துறை, நீர்கொழும்பு, தொடுவாய், உனவட்டுன, கொஸ்கொட, வடக்கு பயாகல, தெஹிவளை, வாதுவ, தல்பிட்டிய, அங்குலானை, முந்தல் - சின்னப்பாடு, ரெக்கவ ஆகிய பகுதிகளில் இருந்து இறந்த நிலையில் 19 ஆமைகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த நாட்களில் கரையொதுங்கிய 10 கடல் ஆமைகளின் உடல்களை உடற்கூற்று பரிசோதனை செய்யும் நடவடிக்கை அத்திட்டிய வனஜீவராசிகள் மத்திய நி​லையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கப்பலில் பரவிய தீயினால் ஏற்பட்ட சூழல் பாதிப்பு காரணமாக ஆமைகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலதிக இரசாயன பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
.