பிரான்ஸ் கடற்படையினருக்காக யால சரணாலயம் திறப்பு

பிரான்ஸ் கடற்படையினருக்காக யால உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் இன்று (08) திறப்பு 

by Staff Writer 08-06-2021 | 9:33 AM
Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் இன்று (08) யால சரணாலயத்திற்கு சுற்றுலா மேற்கொள்ளவுள்ளனர். பிரான்ஸ் தூதரகத்தினூடாக வௌிவிவகார அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்தார். அதற்கமைய, நாட்டிற்கு வருகைதந்துள்ளவர்களில் 101 கடற்படை உறுப்பினர்கள் யால சரணாலயத்திற்கும் 86 பேர் உடவலவ தேசிய சரணாலயத்திற்கும் 235 பேர் ஹபரணை பிரதேசத்திலும் சுற்றுலாவில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு வழிகாட்டுவதற்காக, சபா(F)ரி ஜீப்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பிரான்ஸ் கடற்படையின் 750 உறுப்பினர்களை ஏற்றிய 02 கப்பல்கள் நேற்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பிரான்ஸ் கடற்படை உறுப்பினர்களுக்காக யால சரணாலயம் இன்று திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பயோ பபள் முறைமையின் கீழ் இவர்கள் சுற்றுலாவில் ஈடுபடவுள்ளனர். பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறவுள்ளன. இதேவேளை, நாட்டிற்கு வருகைதந்துள்ள வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் முன்னணி ஹோட்டல்களில் மாத்திரம் மதுபான பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடுமையான நிபந்தனைகளுடன் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலால்வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில் குமாரசிங்க குறிப்பிட்டார். சுற்றுலாத்துறை அமைச்சின் கோரிக்கைக்கு அமைய நாட்டிற்கு வருகைதரும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.