சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு

சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பரப்பினால் பிடியாணையின்றி கைது செய்யப்படுவர் – பொலிஸார் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2021 | 11:15 pm

Colombo (News st) சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்கள், நிழற்படங்கள் மற்றும் காணொளிகளை பதிவிட்டு, அவற்றைப் பரப்புவோரை பிடியாணையின்றி கைது செய்யும் அதிகாரம் உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்தகைய போலித் தகவல்களால் ஏற்படக்கூடிய குற்றங்கள் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துவது, இனங்களுக்கு இடையே அல்லது மதங்களுக்கு இடையே விரிசல் ஏற்படுத்துவது, சிறுவர்கள் அல்லது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், மத நம்பிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது, பல்வேறு மோசடிகளுக்கான சந்தர்ப்பத்தை உருவாக்குவது என்பன அந்த குற்றங்களாகும்.

அத்துடன், போலித் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு முரணாக செயற்பட தூண்டப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தண்டனை சட்டக்கோவையிலுள்ள சரத்துகள், சிவில் மற்றும் அரசியல் சமவாயத்திற்கான சட்டங்கள், கணினி குற்றங்கள் சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம், அவதூறு கருத்துக்கள் சட்டம் ஆகியவற்றுக்கு அமைய இந்த செயற்பாடுகள் தொடர்பில் பிடியாணை இன்றி சந்தேகநபர்களை கைது செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி திட்டமிட்ட வகையில் அல்லது தனிப்பட்ட ரீதியில் பொய்த் தகவல்களை பரப்புதல் அல்லது அதற்கு உடந்தையாக செயற்படுதலை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில அரச நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எனும் அமைப்பின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, நாளை பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தும் வரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்