புதிய அதிவேக வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை, 6 மேம்பாலங்களின் நிர்மாணப் பணிகள் பிரதமர் தலைமையில் ஆரம்பம்

by Staff Writer 07-06-2021 | 1:27 PM
Colombo (News 1st) புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான புதிய அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதன் அங்குரார்ப்பண வைபவம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அலரி மாளிகையில் இருந்து Zoom தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது. 16.4 கிலோமீட்டர் தூரம் கொண்ட களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக வீதியில் 04 சந்திகள் அமைக்கப்படவுள்ளன. சைனா ஹார்பர் பொறியியலாளர் சங்கத்தினால் அமைக்கப்படவுள்ள இந்த அதிவேக வீதிக்காக 134.9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிர்மாணித்து, நடைமுறைப்படுத்தி பின்னர் ஒப்படைத்தல் எனும் அடிப்படையில் சைனா ஹார்பர் பொறியியல் நிறுவனம் இந்த செயற்றிட்டத்தை முன்னெடுக்கின்றது. கொஹுவலை சந்தியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக 2648 மில்லியன் ரூபா செலவில் மேம்பாலம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த மேம்மாலம் 217 .3  மீட்டர் நீளத்தைக் கொண்டதாக அமையவுள்ளது. கொம்பனித்தெரு ரயில் பாதை ஊடாக நீதிபதி அக்பார் மாவத்தை வரையும், உத்தரானந்த மாவத்தையில் மற்றுமொரு மேம்பாலத்தையும், இவ்விரு பாலங்களையும் இணைக்கும் வகையில் மற்றுமொரு மேம்பாலத்தையும் அமைக்கும் பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. பேரேவாவி கொம்பனித்தெரு வீதி ஊடாக சாரணர் வீதி மற்றும் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை வரையான மேம்பாலமும் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலங்கள் 12 மாதங்களில் நிர்மாணிக்கப்படவுள்ளன. கண்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக கெட்டம்பே சந்தியில் மற்றுமொரு மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த மேம்பாலம் இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். வில்லியம் கொபல்லாவ மாவத்தையூடாக செல்லும் மேம்பாலமும் பேராதனையில் இருந்து கண்டி நோக்கி கிளை மேம்பாலமும் இதில் அடங்குகிறது. பேராதனையிலிருந்து கண்டி நோக்கி அமையும் மேம்பாலத்தில் வாகனங்களை செலுத்தும்போது கெட்டம்பேயில் இருந்து தடையின்றி நேரடியாக கண்டி நகருக்கு செல்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.    

ஏனைய செய்திகள்