நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் பலத்த மழை

by Staff Writer 07-06-2021 | 9:13 AM
Colombo (News 1st) மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலும் இன்று (07) முதல் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மூவர் காணாமல் போயுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களைச் சேர்ந்த 88 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலேயே பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கமைய 67,564 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு 270,912 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 26,846 பேர் இடைதங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பலத்த மழை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4.30 மணி வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்குமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.