கப்பலின் VDR கருவி விசாரணைகளுக்காக ஒப்படைப்பு

X-Press Pearl கப்பலின் VDR  கருவி விசாரணைகளுக்காக CID-இடம் ஒப்படைப்பு

by Staff Writer 06-06-2021 | 11:03 PM
Colombo (News 1st) தீப்பற்றிய X-Press Pearl கப்பலின் VDR எனப்படும் தரவுப் பதிவு கருவி, மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த கருவியை கடற்படையினர் நேற்று (05) கண்டுபிடித்தனர். குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பிலுள்ள தரவுப் பதிவு கருவி, நீதிமன்ற உத்தரவை அடுத்து எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் கூறினார். இதனிடையே, கப்பலிலிருந்த எரிபொருளின் நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபை, கப்பல் நிறுவனத்தின் பிரதான கெப்டனுக்கு அறிவித்துள்ளது. கப்பலால் கடலுக்கும் சூழலுக்கும் கடற்கரைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்தார். X-Press Pearl கப்பலிலிருந்து கரையொதுங்கிய திண்மக் கழிவு அடங்கிய நாற்பதுக்கும் அதிகமான கொள்கலன்கள், மேலதிக ஆய்விற்காக வத்தளையிலுள்ள களஞ்சியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க கூறினார். X-Press Pearl கப்பல் தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் துறைசார் நிபுணர்கள் சில முக்கிய விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர். 01. இந்தக் கப்பலில் அபாயம் மிக்க இரசாயனப் பதார்த்தங்கள் அடங்கிய கொள்கலனில் ஏற்பட்ட கசிவை சீர் செய்வதை , கட்டார் துறைமுகம் நிராகரித்திருந்த நிலையில், கொள்கலன்களை ஏற்றிய கப்பல் எவ்வாறு பயணத்தை தொடர முடியும்? 02. கசிவு தொடர்பில் அறிந்துகொண்ட பின்னரும், அந்தக் கொள்கலன்கள் ஏற்றப்பட்ட துபாய் துறைமுகத்திற்கே மீண்டும் கப்பல் செல்லாதது ஏன்? கட்டாரிலிருந்து இந்தியா நோக்கிச் செல்லும் போது கப்பல் துபாயைக் கடந்து பயணித்துள்ளது. 03. இந்திய துறைமுகத்தைச் சென்றடைந்த கப்பல், அபாயத்தை அறிந்திருந்தும் தொடர்ச்சியாகப் பயணித்தது ஏன்? 04. இந்தியத் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகம் நோக்கிப் புறப்படுவதற்கு முன்னர், அபாயகரமான கப்பலை அதன் கெப்டன் கொழும்பிற்குக் கொண்டு வருவதற்கு, கப்பல் நிறுவனத்தின் உள்நாட்டு முகவரூடாக அனுமதி பெறப்பட்டதா? இத்தகைய கேள்விகளுடன் கடற்பயணத்திற்கு முன்னர் கப்பலும் அதிலுள்ள பொருட்களும் உரிய நிலையில் காணப்பட வேண்டும் என துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளர். இதனிடையே, கப்பலினால் ஏற்பட்ட அழிவிற்கு நட்ட ஈட்டைப் பெறும்போது, உள்நாட்டு முகவரின் பொறுப்பு என்னவென கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான விடயமாகும்.