சுற்றுலாத்தலங்களை திறப்பது அபாயகரமானது

சுற்றுலாத்தலங்களை திறப்பது நாட்டு மக்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளும் செயற்பாடு - சஜித் பிரேமதாச ​தெரிவிப்பு

by Staff Writer 06-06-2021 | 9:25 PM
Colombo (News 1st) எதிர்வரும் 8 ஆம் திகதி யால சரணாலயத்தை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தந்துள்ள பிரான்ஸ் கடற்படையினருக்காக சரணாலயம் திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் மாத்திரம் சரணலாயத்தை திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். குறித்த பிரான்ஸ் கடற்படையினரின் சுற்றுலாப் பயணங்கள் அனைத்தும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேற்பார்வையில் இடம்பெறுவதாக அவர் கூறினார். இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கப்பலொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்படை தெரிவித்தது. எனினும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில் பயிற்சிகள் ஏதும் நடைபெற மாட்டாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக யால உள்ளிட்ட சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை திறப்பது நாட்டு மக்களின் உயிர்களை அபாயத்தில் தள்ளும் செயற்பாடு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஆரம்பமான சந்தர்ப்பத்தில், உலக நாடுகள் சுற்றலாப் பணிகளின் வருகையை தடுத்தபோது இலங்கை விளம்பரங்களை பிரசுரித்து கொரோனா நோயாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது கொரோனா அலை ஆரம்பமான போது அரசாங்கம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளை வரவழைத்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா நோயாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படுகின்றமை நாட்டை அபாயகரமான கொரோனா அலைக்குள் தள்ளும் செயற்பாடாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் இந்த தான்தோன்றித்தனமான செயற்பாட்டினை புரிந்துகொள்ள முடியாதுள்ளதாக தெரிவித்துள்ள சஜித் பிரேமதாச, அரசாங்கம் மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.