Update: அனர்த்தங்களில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

தொடரும் சீரற்ற வானிலை; அனர்த்தங்களில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 06-06-2021 | 1:58 PM
Colombo (News 1st) சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இரண்டு மரணங்களும் இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று மரணங்களும் கொழும்பு, களுத்துறை, புத்தளம், காலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு மரணமும் கேகாலை மாவட்டத்தில் ஐந்து மரணங்களும் பதிவாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார். அனர்த்தங்களால் இருவர் காணாமற் போயுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால், 10 மாவட்டங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 45 ஆயிரத்து 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15 ஆயிரத்து 658 பேர், 72 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, தப்போவ, தெதுருஓயா மற்றும் இங்கினிமிட்டி உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் டி. அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளில் தொடர்ந்தும் வௌ்ள நிலைமையே காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரதேசங்களை தவிர்ந்த அதிகூடிய மழைவீழச்சி பதிவாகக்கூடிய ஏனைய பகுதிகளில் வசிக்கும் மக்களும் மண்சரிவு அபாயம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் கேட்டுக் கொண்டுள்ளது.