உளுந்து செய்கையை பாதிக்கும் மஞ்சள ்நோய்த் தொற்று 

உளுந்து செய்கையை பாதிக்கும் மஞ்சள ்நோய்த் தொற்று 

by Staff Writer 06-06-2021 | 11:21 PM
Colombo (News 1st) உளுந்து செய்கையில் ஒருவித மஞ்சள் நோய் பரவுவதாக மட்டக்களப்பு விவசாயிகள் கவலை வெளியிட்டனர். மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடியனாறு மாவடிஓடை , மரப்பாலம், மாவளையாறு, ஊறுகாமம் போன்ற பகுதிகளில் அதிகளவில் உளுந்து செய்கை மேற்கொள்ளப்படுகிறது. இம்முறை உளுந்து செய்கை ஒரு வித மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர். இந்த செய்கை நிலங்களில் உளுந்து செடிகள் மஞ்சள் நிறமாக மாற்றமடைந்துள்ளன. ஆரம்பத்தில் ஓரிரு செடிகளில் மஞ்சள் நோய் காணப்பட்ட போதிலும் தற்போது ஏக்கர் கணக்கில் விரிவடைந்துள்ளதாக செய்கையாளர்கள் கூறினர்.   இதன் காரணமாக தாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் விசனம் வெளியிட்டனர்.     இந்த விடயம் தொடர்பில் கரடியனாறு விவசாய விரிவாக்கல் நிலையத்தின் போதனாசிரியர் முத்துலிங்கம் கலைமோகனிடம் வினவிய போது, அதிக வெப்பம் , கடும் மழை போன்ற காரணங்களால் இவ்வாறான நிலை ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்தார். தற்போது கௌப்பி , உளுந்து போன்றவற்றில் வைரஸ் தாக்கம் பரவலாக இருப்பதாகவும் அவற்றுக்கு மருந்துகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஆரம்பத்தில் ஒரு சில தாவரங்களில் இணங்காணப்படும் பட்சத்தில் முதல் நடவடிக்கையாக பயிர்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் எனவும் முத்துலிங்கம் கலைமோகன் குறிப்பிட்டார்.