கப்பலின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க நடவடிக்கை

X-Press Pearl கப்பலின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க நடவடிக்கை

by Staff Writer 05-06-2021 | 11:29 AM
Colombo (News 1st) கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் X-Press Pearl கப்பலை அண்மித்த பகுதியிலிருந்து கடல் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆய்வுகளுக்காக நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. விசேட குழுவொன்று ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அரச இரசாயன திணைக்களம் தெரிவிக்கின்றது. இதேவேளை, கப்பலின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்கான ஒத்துழைப்பை வழங்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம், கடற்படையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கருப்புப் பெட்டியில் அடங்கியுள்ள தரவுகள், கப்பல் குறித்த விசாரணைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு உதவியாக இருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர். கப்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட குழுவொன்று முன்னெடுத்து வருகின்றது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கோரிக்கை தொடர்பில் இலங்கை கடற்படையிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது. இதற்காக அதிகாரிகளை கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார். எனினும் கடல் கொந்தளிப்பு மற்றும் கப்பலின் தற்போதைய பாதுகாப்பற்ற தன்மை ஆகியவற்றால் கருப்புப் பெட்டியை தேடும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.