விசேட விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் 

MV X-PRESS PEARL கப்பல் தொடர்பில் விசேட விசாரணைக்கு உத்தரவிடுமாறு மனுத்தாக்கல் 

by Staff Writer 05-06-2021 | 12:56 AM
Colombo (News 1st) தீ பரவிய MV X-PRESS PEARL கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் விசேட விசாரணையை மேற்கொள்ள உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சுற்றாடல் நீதி மையம், அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் சில மீனவர்கள் இணைந்து இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். துறைமுகங்கள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியனவும் மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளன. கப்பலில் தீ பரவியமையால், அதில் கொண்டு செல்லப்பட்ட பாரியளவான இரசாயனப் பொருட்கள் கடல் நீரில் கலந்து, பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், இதனூடாக தங்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவித்து உத்தரவிடுமாறு உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர். இதனிடையே, MV X-PRESS PEARL கப்பல் தொடர்பிலான அடுத்த கட்ட செயற்பாட்டிற்காக அரசாங்கத்தின் விசாரணைக் குழுவொன்று இன்று கப்பல் மூழ்கும் இடத்திற்கு சென்றது. சம்பவம் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுத்தருமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடற்படையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த விஜயம் இடம்பெற்றது. அரச பகுப்பாய்வு திணைக்களத்தின், 14 அதிகாரிகள் சமுத்திரா ஆரக்ஷ கப்பலில் சம்பவ இடத்தை சென்றடைந்தனர். இந்நிலையில், கப்பலுக்கு சொந்தமான  எக்ஸ்ப்ரஸ் பீட்டர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி சாமுவேல் லொஸ்கொவிட்ஸ்,  கப்பல் விபத்திற்கு  கவலை தெரிவித்துள்ளதுடன், மன்னிப்பும் கோரியுள்ளார். சிங்கப்பூரின் செனல் நியூஸ் ஏஷியாவிற்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.